Tag Archives: வேகாக் கால்

ஞான வெட்டியான் 1500 – 23

ஞான வெட்டியான் 1500 – 23

###############################

பாயிரம்

23.திரைகடந்து திரைக்குமேற் பெரும்பாழ் தாண்டிச்

………சிறந்தசாகாக் காலும்வேகாத் தலையுந் தாண்டி

மறைபுகுந்து வோதுகின்ற வேதந் தாண்டி

………மதனகலி யாணதிரு வல்லி மாது

வரையெழுந்த பதினெட்டாங் கோட்டின் மேலு

………மாதளம்பூ வடிவமனோன் மணியைப் போற்றி

கரை கடந்து பறையனென்று தள்ளி வைத்த

………கருத்தையினிச் சொல்லுகிறே னாண்டே கேளே.

 

ஏழு திரைச் சீலைகளைக் கடந்து, அதற்குமேலுள்ள பெரிய பாழ்(ஆகாயம், சூனியம், வெற்றிடம்) தாண்டி, சாகாக்காலும் வேகாத் தலையுந்தாண்டி, மறை புகுந்து ஓதுகின்ற வேதம் தாண்டி, கால்படா மலை (வரை) எழுந்த பதினெட்டம் கோட்டின் மேல் உள்ள மதன கலியாண திருவல்லி மாதா மாதுளம் பூப்போன்ற மனோன்மணியைப் போற்றி வணங்கி, எல்லைமீறிப்(கரைகடந்து) பறையனென்று தள்ளிவைத்த கருத்தை இனி நான் சொல்லுகிறேன் கேள் ஆண்டே(எசமானே).

 

வேகாத கால், உடல் வெப்பத்தால் எரிந்து தீய்ந்து கெடாத பிராணனாகிய காற்று. பிராண வாயு நெருப்பின் தன்மை உடையது ஆதலால் உடலினுள் நின்று உலவுவதாலும், “வேகாத கால்” எனப்படுகிறது. அதனை அடக்கி உடல் முதிர்ந்து வாடிக்கெடாதபடி நிறுத்தும் பயிற்சி சாகாக் கலை.”

போகாப் புனல் என்பது வேறு உடம்பு படைத்தற்குரிய வித்துக்களைச் சுமந்து நிற்கும் வெண்ணிற விந்து. இது உடம்பினுள் இயற்கையாகச் சுரப்பது.